இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 5-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் 2 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்தது – இந்தியாவை தோற்கடித்து மிரட்டல் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 2 என்ற தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் எப்போதும் ராஜாதான் என நிரூபித்தது. மறுபுறம் அனுபவமில்லாத பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அசத்திய இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று 100% நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காணப்பட்டனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி இன்னிங்சில் 200 ரன்களை துரத்துவதே சிம்ம சொப்பனம் என்ற நிலையில் இதற்குமுன் வரலாற்றில் 350க்கும் மேற்பட்ட இலக்கை நிர்ணயித்த எந்த போட்டிகளிலும் இந்தியா தோற்றதே கிடையாது. மேலும் சமீப காலங்களில் வெளி நாடுகளில் இந்தியா பதிவு செய்துள்ள வரலாற்று வெற்றிகளும் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன. இந்த அத்தனை நம்பிக்கைகளுக்கும் முக்கிய காரணம் முன்னாள் கேப்டன் விராட் கோலி என்றுதான் கூறவேண்டும்.
கேப்டனாக பொறுப்பேற்ற 2014இல் சொந்த மண்ணில் மட்டும் வெல்லக்கூடிய அணியாக தர வரிசையில் 7-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவை அவர் வெளிநாடுகளில் முன்னேற்றுவதற்கான ஆணையை பலப்படுத்தினார் . வெளிநாட்டில் வெற்றி பெறுவதற்கு எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும் என்ற முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் கருத்தை ஆழமாக நம்பிய அவர் சுழல் பந்து வீச்சுக்கு கை கொடுக்காது என்பதை உணர்ந்து உமேஷ் யாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரலாற்றில் அதிக ஆதரவு அளித்தார்.
அதன் பயனாக சொந்த மண்ணில் பிரம்மாண்ட வெற்றிகளைப் பெறும் இந்தியா முதலில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலவீனமான வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்க துவங்கி 2016 முதல் உலகின் நம்பர் ஒன் அணியாக உருவெடுத்தது. இது வெறும் வாய் வார்த்தைகளால் சொல்லவில்லை. ஏனெனில் 1932 முதல் 2016 வரை வெறும் 13 போட்டிகளில் மட்டுமே எதிரணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சு துறை 2017 – 2022 வரை 15* போட்டிகளில் வீழ்த்தியது.
அதோடு தனது ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான கேப்டன்ஷிப் மூலம் மிரட்டலை கொடுக்கும் எதிரணிகளுக்கு அஞ்சாமல் பதில் மிரட்டலை கொடுக்கும் அணியாக இந்தியாவை மாற்றிய விராட் கோலி தோல்வியின் பிடியில் சிக்கினாலும் போராடாமல் தோற்கக்கூடாது என்ற போராட்ட குணத்தை இந்திய அணியில் ஆழமாக விதைத்தார். அதன் காரணமாக 2018 முதல் தென்ஆப்ரிக்கா போன்ற ஆசியக் கண்டத்திற்கு வெளியே வெற்றிகளை குவிக்க துவங்கிய இந்தியா உச்சபட்சமாக 2019இல் 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1 (4) என்ற கணக்கில் வரலாறு படைத்தது. அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்த விராட் கோலி 2018 – 2021 வரையிலான இதர நாடுகளை விட வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார். அந்த வெற்றி நடையே இந்த தொடரிலும் 2 – 1* என்ற கணக்கில் எதிரொலித்தது. மெகா வீழ்ச்சி: அப்படி அற்புதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய டெஸ்ட் அணியை கடந்த ஜனவரியில் நிகழ்ந்த கேப்டன்ஷிப் மாற்றம் பெரிய அளவில் தற்போது பாதித்துள்ளதாக நிறைய ரசிகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மொத்தமாக 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய கேப்டன் என்ற சாதனையும், 16 வெற்றிகளுடன் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையும், 7 வெற்றிகளுடன் சேனா நாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையைப் படைத்த அவர் உலக கோப்பையை வாங்கி தரவில்லை.
இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி அந்த பொறுப்பை ரோகித் ஷர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த அவர் வெளி உலகிற்கு பணிச்சுமை காரணமாக காட்டி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அத்தோடு ரவி சாஸ்திரி – விராட் கோலி என்ற தலைமை கூட்டணி ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் என்று தலைகீழாக மாறியது. அதன்பின் இந்த வருடத்தில் இதுவரை 3 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா களமிறங்கி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. கடந்த ஜனவரியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் விராட் கோலி கடைசியாக கேப்டனாக செயல்பட்ட போட்டியில் இந்தியா தோற்றது. ஆனால் அது கேப்டன்ஷிப் மாற்றத்துக்குப்பின் நடந்த போட்டியாகும். இந்த 3 போட்டிகளுக்கும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
மேலும் வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடத்தில் இதுவரை பங்கேற்ற 3 வெளிநாட்டு போட்டிகளிலும் இந்தியா நிர்ணயித்த 200+ இலக்கை எதிரணிகள் அசால்டாக சேசிங் செய்து வென்றுள்ளனர்
மேலும் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ஒருமுறை கூட வெளிநாடுகளில் 3 முறை இந்தியா தொடர்ச்சியாக தோற்றதில்லை. ஆனால் இந்த ஒரே வருடத்தில் களமிறங்கிய 3 வெளிநாட்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது
மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் வெளிநாடுகளில் மீண்டும் இந்தியா சரியத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. இதற்கு காரணம் கேப்டன்ஷிப் மாற்றம் எப்படி பாதிக்கும் என்பதை நீங்கள் கேட்கலாம். மேலும் விராட் கோலி பேட்டிங்கில் சுமாராக செயல்படுகிறார் என்பதும் உண்மைதான். ஆனால் தேன்கூட்டை கலைப்பதை போல் நல்ல கேப்டன் கிடைத்து வெற்றிநடை போட்டு வரும் ஒரு அணியின் தலைமையை கலைத்தால் புதிய தலைமை வந்து உட்கார்ந்து செட்டாவதற்கு சில காலங்கள் தேவை.